விஜய் சார்... அதென்ன ஜனநாயகன்? மக்கள் நாயகன் தானே தமிழ்?

நடிகர் விஜய் யின் கடைசித் திரைப்படம் என்ற அறிவிப்புடன் தயாராகிவரும் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். தளபதி 69 என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தப்படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதல் பார்வை படத்தை விஜய் கட்சியினர் சமூகத்தளங்களில் பகிர்ந்து அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியலுக்கு ஏற்றாற் போல் பின்னணியில் மக்கள் கூட்டம் இருக்க, மேடையிலிருந்து செல்ஃபி படம் எடுப்பது போல் விஜய் காட்சி தருகிறார். அடடா இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி வெளியிடும் செல்ஃபி படமாச்சே?
இன்னொரு பக்கம், படத்தின் பெயரில் இந்தி இருப்பதாக ஒரு தரப்பினர் விஜய் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர். ‘ஜன’ என்பது தமிழ்ச்சொல் இல்லை, இந்தியில் ’ஜன்’ என்ற சொல்லைத் தான் தமிழில் ஜன என்று எழுதிகிறார்கள். பிரதமர் மோடியின் திட்டப் பெயர்களைப் பார்த்தாலே அதில் உள்ள ’ஜன்’ என்ற சொல்லை வைத்தே இது இந்தி என தெரிந்து கொள்ளலாம்.
இந்தியில் ஜன் என்பது தமிழ்ல் மக்கள் என்றே மொழியாக்கம் செய்யப்படவேண்டும். அப்படிப் பார்த்தால் படத்தின் பெயர் மக்கள் நாயகன் என்று தானே இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவேளை மக்கள் நாயகன் என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்ட கிராமத்து நாயகன் ராமராஜன் கோவித்துக்கொள்வார் என்று ஜன் நாயகன் என்று பெயர் வைத்தனரா அல்லது வேறு ஏதாவது அரசியல் அழுத்தங்கள் இருக்கலாமோ என்ற கேள்விகளும் எழுகிறது.