பிரபல இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 
Sangeeth Sivan

பிரபல இயக்குநர் சங்கீத் சிவன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 65.

1990-ல் வெளியான ‘வ்யோஹம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் சங்கீத் சிவன். தொடர்ந்து யோதா, டாடி, கந்தர்வம், இடியட்ஸ் போன்ற பல படங்களை இயக்கி உள்ளார். மோகன் லால் நடித்த யோதா படம் இன்றளவும் கிளாசிக் படமாக பார்க்கப்படுகிறது.

Yodha

1998-ம் ஆண்டு ஸோர் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் சன்னி தியோல் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், கியா கூல் ஹை ஹம், யாம்லா பக்லா தீவானா 2 போன்ற இந்தி படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இந்தி மற்றும் மலையாளத் திரைப்படத் துறையில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார்.

மும்பையில் வசித்து வந்த சங்கீத் சிவன், நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மே 8) இரவு 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை அவரின் சகோதரர் சந்தோஷ் சிவன், ஆங்கில ஊடகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். 

RIP

சங்கீத் சிவனின் இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From around the web