மூத்த பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப், கொல்கத்தா மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 68.
தொலைக்காட்சித் தொடர்களின் பிரபலமான முகமாக இருந்த பார்த்தசாரதி தேப், சமீபத்தில் வெளியான ‘ரக்தபீஜ்’ படத்தில் நடித்துள்ளார். இவர் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர் டிராமா, சீரியல்கள், திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவைகளில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாது, அவர் மேற்கு வங்க திரைப்பட கலைஞர்கள் மன்றத்தின் துணைத் தலைவராக இருந்தார்.
இவர், பிரேம் அமர், பியோம்கேஷ், ஹோதாத் தேகா, ஷுது துமி, கோலாபி முக்த ரஹஸ்யா, பிலேர் டைரி, சுது பலோபாசா, ஸ்வப்னே தேகா ராஜகன்யா மற்றும் காகபாபு ஹியர் கெலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நடித்துள்ள சில படங்கள் டிப்பிங் பணி முடிவடையவில்லை.
நீண்ட காலமாக சிஓபிடி தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த தேப், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எம்.ஆர்.பங்கூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாகவே அவரது உடல்நிலை மோசமடைய ஐசியுவில் வைத்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.50 மணியளவில் காலமானார்.
Sad to hear the demise of eminent actor #ParthaSarathiDeb... he was also vice-President of West Bengal Motion Picture Artists’ Forum... Deep condolence to his family... 🙏 pic.twitter.com/86xrnw1hx2
— West Bengal Box Office /𝕏 (@WB_BoxOffice) March 23, 2024
இதனை அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்தனர். அவர் இறந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க திரைப்பட கலைஞர்கள் மன்றம் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் டெக்னீசியன் ஸ்டுடியோவுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படும் என்றும் கூறியுள்ளது. தேப் மறைவுக்கு பலரும் தங்களது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.