பிரபல பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது.!

 
Waheeda Rehman

பிரபல பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு, தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டில் கடந்த 1938-ம் ஆண்டு பிறந்தவர் நடிகை வஹீதா ரஹ்மான். இவர், 1955-ல் வெளியான ‘ரோஜுலு மராயி’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 1956-ல் வெளியான ‘சிஐடி’ படத்தின் மூலம் பாலிவுட் உலகத்தில் நடிகையாக கால்பதித்தார். அதே ஆண்டில் தமிழில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் நடித்து தமிழிலும் அறிமுகமானார். தமிழில் கடைசியாக கமலின் ‘விஸ்வரூபம் 2’ படத்தில் நடித்தார்.

ஐந்து தலைமுறைகளாக திரைத்துறையில் பயணிக்கும் இவர், பல்வேறு மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1971-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ரேஷ்மா அவுர் ஷெரா’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1972-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற வஹீதாவுக்கு, 2011-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் வழங்கி ஒன்றிய அரசு கௌரவித்துள்ளது. 

Waheeda Rehman

இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவது `தாதாசாகேப் பால்கே விருது’. அவ்வகையில், இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான இது, இந்த ஆண்டு பழம்பெரும் நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படும் என ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இது பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியத் திரையுலகில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக இந்த ஆண்டு மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படுவதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியையும் மரியாதையையும் உணர்கிறேன்.

இந்தி படங்களில் நடித்த வஹீதா ஜி, விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றவர். அவர் நடித்த படங்களில் பியாசா, காகஸ் கி பூல், செளதாவி கா சந்த், பிவி அவுர் குலாம், கைடு, காமோஷி போன்ற பல குறிப்பிடத்தகுந்தவை. சுமார் 5 தசாப்தங்களாக நீளும் தனது கலை வாழ்வை, தேர்ந்தெடுத்து நடித்த தனது கதாபாத்திரங்கள் மூலம் மிகவும் நேர்த்தியாக அவர் அமைத்துக்கொண்டார்.

இந்த நேர்த்தி ‘ரேஷ்மா அண்ட் ஷீரா’ படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது. பத்மஸ்ரீ, பத்ம பூஷண் வஹீதா ஜி தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பின் மூலம் தான் சார்ந்திருக்கும் தொழிலில் சிறந்த உயரத்தினை அடையலாம் என்று இந்திய பெண் சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள இந்த வேளையில், வஹீதா இந்த உயரிய விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இந்திய சினிமாவின் ஒரு முன்னணி பெண்மணி, சினிமாவுக்கு பிறகான தனது வாழ்வை பொதுத் தொண்டுக்கு அர்ப்பணித்த ஒருவருக்கு செய்யும் பொருத்தமான மரியாதையாக இருக்கும். நமது திரைப்பட வரலாற்றின் உள்ளார்ந்த செழுமையாக இருக்கும் அவரது பங்களிப்பினை வணங்கி, அவரை நான் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web