பழம்பெரும் நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 
Sankaran

பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான ரா.சங்கரன் இன்று காலமானார். அவருக்கு வயது 92.

1962-ல் வெளியான ‘ஆடிப்பெருக்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரா.சங்கரன். தொடர்ந்து ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, அமரன், சின்ன கவுண்டர், சதி லீலாவதி, காதல் கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தில் ரேவதியின் அப்பாவாக சந்திரமெளலி கேரக்டரில் நடித்து பிரபலமானார். ரா சங்கரனை, ‘மிஸ்டர் சந்திரமெளலி’ என கார்த்திக் கூப்பிடும் அந்தக் காட்சி இப்போதும் ரசிக்க வைக்கும்.

Sankaran

இதனிடையே 1974-ம் ஆண்டு வெளியான 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு' என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரா சங்கரன். தொடர்ந்து தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, தூண்டில் மீன், பெருமைக்குரியவள், வேலும் மயிலும் துணை, குமரி பெண்ணின் உள்ளத்திலே போன்ற படங்களை இயக்கியுள்ளார். ரா.சங்கரன் கடைசியாக 1999-ம் ஆண்டு வெளியான அழகர்சாமி படத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில வருடங்களாக, வயது மூப்பு காரணமாக திரைப்படங்கள் மற்றும் எந்த திரைப்பட பணியிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல் ஓய்வில் இருந்த, ரா.சங்கரன் இன்று காலமானார். இந்த தகவல், திரையுலகை சேர்ந்த பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா ரா.சங்கரனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ரா.சங்கரனின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

From around the web