அசிங்கம்.. அநாகரீகத்தின் உச்சம்.. அமைச்சரிடம் நடிகை நமீதா பரபரப்பு புகார்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை நமீதா, தன்னிடம் அத்துமீறிய அதிகாரி மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, 2002-ம் ஆண்டு ‘சொந்தம்’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து தமிழில் 2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா. அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமீதா நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த நமீதாவுக்கு ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு குறைந்தது. இதனால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் குதித்த நமீதா, வீரேந்திர செளத்ரி என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன.
கடவுள் பக்தி கொண்ட நடிகை நமீதா, இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தன்னுடைய கணவருடன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு நமீதாவை தடுத்து நிறுத்திய அதிகாரி ஒருவர், தாங்கள் இந்து தானா என கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு ஆமாம் என சொன்ன நமீதாவிடம் அதற்கான சான்றிதழை கொடுக்குமாரு கூறிய அந்த அதிகாரி ஜாதிச் சான்றிதழையும் கேட்டிருக்கிறார்.
தான் திருப்பதியில் திருமணம் முடித்தேன், என்னுடைய குழந்தைகளுக்கும் கிருஷ்ணர் பெயரை சூட்டி இருக்கிறேன் என நமீதா சொல்லியும் அவரை கோவிலுக்கு அந்த அதிகாரி அனுமதிக்கவில்லையாம். பின்னர் மேலதிகாரி சொன்னால் அனுமதிப்பேன் என்று சொல்லிவிட்டாராம். அதன்பின்னர் இந்த பிரச்சனை மேலதிகாரியிடம் கொண்டு செல்லப்பட்டு, அவர் நமீதாவை சாமி தரிசனம் செய்ய அனுமதித்திருக்கிறார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
அதிகாரியின் இந்த செயலால் கடுப்பான நமீதா, தன்னை அசிங்கப்படுத்திய அந்த அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சர் சேகர் பாபுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபோன்று ஒரு மோசமான அனுபவத்தை என் வாழ்க்கையில் எதிர்கொண்டதில்லை என ஆதங்கத்துடன் கூறி உள்ள நமீதா, தான் கோவிலில் தரிசனம் செய்யும் வரை பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நமீதாவின் புகாருக்கு அமைச்சர் ஆக்ஷன் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.