உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’.. நாளை வெளியாகிறது ட்ரெய்லர்!!

 
Mamannan

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள ‘மாமன்னன்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

2008-ல் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘குருவி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்த இவர், எம்.ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், நண்பெண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் எம்.எல்.ஏ வாக இருந்த இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார்.

Mamannan

அவரின் கடைசி படமாக ‘மாமன்னன்’ இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். அந்த கடைசி படம் தான் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 


இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் கடந்த 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியிருந்த இந்தப் பாடல் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் நீக்கமற நிறைந்துள்ளது. மேலும் படத்தின் அனைத்து பாடல்களும் அண்மையில் வெளியான நிலையில், நேற்று ‘கொடி பறக்குற காலம் வந்தாச்சு’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

From around the web