துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்.. வாழ்த்து சொன்ன உலகநாயகன்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றிருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரடியாக அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் திரைப்படங்கள் தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதன் பின்னர் படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனது முகத்தினை நன்கு பதிக்க வைத்தார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேர்த்து 39 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாராமும் ஒரு காரணம் என கூறப்பட்டது. இதனால், அவருக்கு கட்சியில் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் சென்னையில் உள்ள, திருவல்லிக்கேனி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டதால், திமுக அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் தொடங்கி திமுக பொறுப்பாளர்கள் வரை பலரும் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இதனால் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கொடுக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். இவர் அமைச்சரான பின்னர், சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தினார். தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியில் ரூபாய் 100 கோடிகளை செலவு செய்து இந்த செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியது.
அதன் பின்னர் கேலோ இந்தியா போட்டிகளையும் தமிழ்நாட்டில் நடத்திய அமைச்சர் என்ற பெறுமையைப் பெற்றார். தொடர்ந்து வந்த 2024-ம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி அங்கம் வகித்த INDIA கூட்டணிக்கு பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தலில் இவரது பிரச்சாரம் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. இந்த தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது.
Congratulations @Udhaystalin on your elevation as Dy. Chief Minister of Tamil Nadu. Today, you undertake a solemn oath both to the Constitution of India and the people of Tamil Nadu. I’m confident you will faithfully serve them both. pic.twitter.com/y36GFN13jD
— Kamal Haasan (@ikamalhaasan) September 29, 2024
இந்நிலையில் கடந்த மாதத்தில் கூட, எஃப் 4 கார் பந்தயம் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழ்நாட்டின் பக்கம் கவனத்தை திருப்ப வைத்தார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 29) தமிழ்நாடு துணை முதல்வராக பதவி ஏற்கின்றார். அமைச்சராக பொறுப்பேற்று, 655 நாட்களில் துணை முதல்வராக பதவி ஏற்கின்றார். இவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “வாழ்த்துகள் உதயநிதி நீங்கள் துணை முதல்-அமைச்சராக உயர்ந்துள்ளீர்கள். நீங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழ்நாடு மக்களுக்கும் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.