மீண்டும் ரீ-ரிலீஸாகும் ‘துப்பாக்கி’.. உற்சாக வெள்ளத்தில் விஜய் ரசிகர்கள்! 

 
Thuppaki Thuppaki

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21-ம் தேதி துப்பாக்கி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

சமீப காலமாக ஹிட் திரைப்படங்கள் அனைத்தும் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. முன்பு நடிகர்களின் பிறந்தநாள் அல்லது படத்தின் வருடாந்திர கொண்டாட்டம் ஆகிய நாட்களில் மட்டுமே வெளியிடப்பட்டன.

ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் திரையரங்குகளில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் முன்னணி நடிகர்களின் பழைய படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த படங்களும், புதிய படங்களுக்கு இணையான வசூலைக் குவித்து வருவது சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Pokkiri

அந்த வகையில், விஜயின் ‘கில்லி’ படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது வரை வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கில்லி விரைவில் 50வது நாளை எட்டவுள்ள நிலையில், சென்னை கமலா திரையரங்கில் வரும் ஜூன் 8-ம் தேதி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜயின் பிறந்தநாள் வரும் 22-ம் தேதி வரவுள்ள நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக அவரது நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘துப்பாக்கி’ படத்தை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் துப்பாக்கி. இதுவரை வெளியான விஜய் திரைப்படங்களில் வேறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் வெற்றி பெற்றன. ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையும் தமிழில் பிரபலமானது. இன்று வரை விஜய் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக துப்பாக்கி உள்ளது. படத்தின் இடைவேளை காட்சி அனைவருக்கும் பிடித்தமான காட்சியாக இன்று வரை உள்ளது.


ஏற்கனவே, ரீ-ரிலிஸான கில்லி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், விஜயின் பிறந்தநாளுக்கு மீண்டும் துப்பாக்கி படம் வெளியிடப்படுவது அவரது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போக்கிரி திரைப்படமும் விஜய் பிறந்தநாளுக்கு ரீ-ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவுள்ள கோட் படத்தின் அப்டேட்டும் விஜய் பிறந்தநாளுக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

From around the web