என் அப்பா மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறார் என யோசித்து பேசுங்கள்.. கொந்தளித்த ஏ.ஆர் ரஹ்மானின் மகள்!

என் அப்பா மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறார் என யோசித்து பேசுங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் கூறியுள்ளார்.
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் (செப் 10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. ரசிகர்கள் பலர் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஸ்கேம் என்று சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.
ஒரு சிலர் சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு மதவாதி என்றும் காசுக்காக அவர் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என்றும் கடுமையான விமர்சனம் வைத்தனர். ஆனால் இந்த விமர்சனத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்திருந்தார். ஒரு இசை நிகழ்ச்சி நன்றாக நடத்த வேண்டும் என்பது மட்டுமே ஒரு இசையமைப்பாளரின் எண்ணமாக இருந்தது, வெளியே நடக்கிறது என்பதை தெரியாமல் இருந்து விட்டேன், இருப்பினும் இந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன், நான் பலிகடா ஆகிவிட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனங்களுக்கு அவருடைய மகள் கதீஜா ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2016-ம் ஆண்டு சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மழை பெய்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
🙏🙏🙏 pic.twitter.com/b4QPvMCXWf
— Khatija Rahman (@RahmanKhatija) September 11, 2023
2018-ம் ஆண்டு கேரளாவில் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தி அந்த பணத்தை அவர்களுக்கு உதவி செய்தார். அதேபோல், 20220-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பின் போது அடிப்படை வசதிகள் தேவைப்படும் பல குடும்பங்களுக்கு அவர் உதவி செய்தார்.
மேலும் 2022-ம் ஆண்டு லைட்மேன் குழுவினர்களுக்காக ஒரு இலவச இசை நிகழ்ச்சியை நடத்தி அவர்களது குடும்பங்களுக்கு உதவினார். இதையெல்லாம் மறந்து விட்டு அவர் மீது ஒரு சில மீடியாக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பேசுவது வருத்தத்தை அளிக்கிறது, இது மிகவும் மலிவான அரசியல் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.