சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' படத்தின் டிரெய்லர் வெளியானது..!

 
Ayalaan

சிவகார்த்திகேயன் நடித்து உள்ள ‘அயலான்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டைம் டிராவல் ஜானரில் மிகக் குறைவான பட்ஜெட்டில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கி தமிழ் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குநர் ரவிக்குமார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து  சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்திலிருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

Ayalaan

கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும்வகையில் ஏலியன் உருவ பொம்மை வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஏலியன் பக்கத்தில் நின்றுக் கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நடிகர் சிவகார்த்திகேயனும் ஏலியனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படத்தின் டிரெய்லரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் மிகவும் எளிமையான இளைஞராக நடிகர் சிவகார்த்திகேயன் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த பூமிக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ஏற்படும் ஆபத்தை ஏலியனின் துணையுடன் அவர் முறியடிப்பதாக இந்த டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் சூட்டிங் 85 நாட்களில் நடந்து முடிந்த நிலையில் சிஜி வேலைகள் மட்டுமே அதிகமான நாட்களை எடுத்துக் கொண்டதாக முன்னதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரில் படத்தின் VFX எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. பாடல்களிலும் இவை எதிரொலிக்கின்றன. பாடல்களில் ஏஆர் ரஹ்மானின் இசை செய்துள்ள பங்கும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தப் படத்தில் போடப்பட்டுள்ள உழைப்பிற்கு ஏற்ப ஊதியத்தை படம் கண்டிப்பாக கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பிற்கேற்ற என்டர்டெயின்மெண்டை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயன் கேரியரில் பெஸ்ட்டாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web