தனி அறைக்கு அழைத்த உச்ச நடிகர்? பிரபல மலையாள நடிகை குற்றச்சாட்டு!

 
Sonia Thilakan

உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ஒருவர், தன்னை சந்திக்க தனி அறைக்கு வரும்படி அழைத்தார் என பிரபல நடிகை சோனியா தெரிவித்தது கேரள திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மலையாள படப்பிடிப்பு தளத்தில், நடிகைகளின் பாதுகாப்பு தொடர்பாக விசாரித்த ஹேமா கமிட்டி, கேரள அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில், எந்தப் பாதுகாப்பும் நடிகைகளுக்கு கிடையாது என அதிர்ச்சியூட்டும் வகையில் தெரிவித்திருந்தது. 15 பேர் கொண்ட ஆணாதிக்க சக்திகள், ஒரு மாஃபியா கும்பலைப் போல் மலையாள திரையுலகை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்றும் ஹேமா கமிட்டி சுட்டிக்காட்டியது.

இந்த நிலையில் தான், மலையாள திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த மறைந்த முன்னணி நடிகர் திலகனின் மகளான, நடிகை சோனியா பரபரப்பு புகார் ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதில், மலையாள நடிகர்களின் சங்கமான AMMA-வில் நடந்த தவறுகளை தனது தந்தை திலகன் பேசியதால், அதிருப்தி அடைந்த முன்னணி நடிகர்கள் 10-க்கும் மேற்பட்டோர், தனது தந்தையை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.

sonia

மேலும், தனது தந்தை மறைவுக்குப் பிறகு ஆறுதல் கூறும் வகையில் தொலைபேசியில் தன்னிடம் பேசிய முன்னணி நடிகர், திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியதாக நடிகை சோனியா குறிப்பிட்டார். மேலும் சில முக்கிய விவரங்களை தெரிவிக்க வேண்டி இருப்பதால் தன்னுடைய அறைக்கு வருமாறு அந்த ஸ்டார் நடிகர் கூறியதாகவும், அதற்கு தாம் மறுப்பு தெரிவித்ததால், செல்போனில் சில ஆபாச தகவல்களை அந்த நடிகர் அனுப்பியதாகவும் கூறினார்.

அப்போதுதான் அவர் எதற்காக அறைக்கு அழைத்தார் என்பது தனக்கு புரிந்தது எனக் குறிப்பிட்டுள்ள நடிகை சோனியா, அந்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்பதை நேரம் வரும்போது கூறுவேன் என்றும் கூறியுள்ளார்.

இது ஒருபுறம் என்றால், ஹேமா கமிட்டியின் அறிக்கையில் 296 பக்கங்கள் இருந்தாலும், அதில் 233 பக்கங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. தனிநபர் உரிமையை பாதிக்கும் வகையில் உள்ள பாகங்களையும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டாம் என்று தகவல் உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டதால் அந்த பாகங்களை தவிர்த்து, 233 பக்க அறிக்கையை ஹேமா கமிட்டி சமர்ப்பித்திருக்கிறது. அதே நேரம், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தாக்கல் செய்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் பென் டிரைவ்களில் இருந்த விவரங்கள் அடங்கிய மேலும் 400 பக்கங்கள் கொண்ட அறிக்கை கேரள அரசிடம் உள்ளது. ஆனால் இந்த தகவல்கள் எதுவுமே வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக திலகனின் மகளான நடிகை சோனியா அளித்துள்ள பேட்டியில், வெளியிடப்படாத பக்கங்களில் இருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக கருத்து தெரித்த முதல்வர் பினராயி விஜயன், பெண் கலைஞர்களிடம் அத்துமீறும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

From around the web