டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் இருந்து வெளியான ‘பிரெஞ்ச் குத்து’ பாடல்.. இணையத்தில் வைரலாகும்  சந்தானத்தின் ஆட்டம்.!

 
DD Returns

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ஷோக்களின் மூலம் பிரபலமானவர் சந்தானம். தமிழ் சினிமாவிலும் மாஸாக என்ட்ரி கொடுத்து காமெடியில் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பெற்று வைத்துள்ளார். ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக மட்டுமே இருந்து வந்த நடிகர் சந்தானம், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வந்தார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்து போர் அடித்த அவர், ஹீரோவாக களமிறங்க தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

2013-ம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்குதுட்டு, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஹீரோவாக இவர் பல படத்தில் நடித்திருந்தாலும், ஒரு சில படங்களே பெயர் சொல்லும் அளவுக்கு ஹிட் பெற்றது. 

Santhanam

சமீபத்தில் இவர் நடித்த டிக்கிலோனா, சபாபதி, குலு குலு, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது கிக் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி வடக்கப்பட்டு ராமசாமி படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 

இப்படி இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் சந்தானம் ‘டிடி ரிட்டன்ஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பிரேம் ஆனந்த் என்பவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து ரசிகர்களுக்கு ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரஞ்ச் குத்து வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடலை ஆப்ரோ மற்றும் கானா முத்து ஆகியோர் பாடியுள்ளனர். இப்படத்தின் பாடல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் சந்தானம் திரைப்படம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

From around the web