ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமை.. ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

 
Dhanush - Udhayanidhi

தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததால் இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ தர சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் கடும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

Udhay

இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் முதல் நாள் வசூலில் முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் நடிகர் தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்தினார்.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷிற்கும், நடிகர் சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகை பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் எனது பாராட்டுகள்.


மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web