‘PS2’ பட நடிகை வீட்டில்  திருட்டு.. தெரிஞ்சவங்களே என் வீட்ல திருடிட்டாங்க.. ட்விட்டரில் பகிர்வு!!

 
Vinodhini Vaidynathan

தனது வீட்டில் நன்கு தெரிந்த நபர்கள் இருவரே பணத்தை திருடிவிட்டதாக நடிகை வினோதினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2011-ல் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வினோதினி வைத்தியநாதன். அதனைத் தொடர்ந்து யமுனா, கடல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது வீட்டில் நன்கு தெரிந்த நபர்கள் இருவரே பணத்தை திருடிவிட்டதாக நடிகை வினோதினி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Vinodhini Vaidynathan

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் நடிகை வினோதினி வைத்தியநாதன், “சென்ற வாரம் என்னிடமிருந்து 2 நபர்கள் மொத்தம் 25,000 ரூ திருடிவிட்டனர். (தனித்தனியே நடந்த இரு சம்பவங்கள்). இருவர் மீதும் போலீஸ் கம்ப்ளையிண்ட் தரப்பட்டு இந்த வாரத்திற்குள் பணத்தைத் திரும்பத் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை.

அவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இல்லையென்றாலும், ஒரு வகையான அன்னாடங்காச்சிகள் தான். ஒருவர் வீட்டு பெயிண்டர். மற்றொருவர் மெக்கானிக். தேவைக்காக பணம் திருடிவிட்டனர். CCTV வீடியோ இருந்ததால் ஒருவர் ஒப்புக்கொண்டார். மனைவியின் நம்பருக்கு அழைத்து கழுவி ஊத்தியதாலும் அந்த மனைவியுடன் இவர் இப்பொழுது வாழாததாலும் மற்றொருவர் ஒப்புக்கொண்டார்.

இருவரும் நன்றாக வேலை செய்யக்கூடியவர்கள். சொல்லப்போனால் அந்த மெக்கானிக்கை எங்களுக்கு பல வருடங்களாகத்தெரியும். அந்த பெயிண்டர் தனியாக பிராஜெக்ட் வாங்கியும், அர்பன் கம்பெனி என்ற கார்ப்பரேட்டிலும் ஒப்பந்த வேலைப் பார்க்கிறவர். சாதாரணமாக, இப்படிப்பட்டவர்கள் உழைத்து சாப்பிடவே நினைப்பார்கள். பின் தங்கிய நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் இதுபோன்றவர்கள் தங்களது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் பல குறிக்கோள்களோடு வாழ்வர்.

தனது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பார்கள். பின் இவர்களை (அதாவது களவுக்குப் பரிச்சயமில்லாதவர்களை) எது திருடத் தூண்டுகிறது? இன்றைய காலகட்டமும், நாம் வாழும் சமூகச்சூழலும்தானே. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மாநில வரிகள், பணவீக்கம், பெட்ரோல் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, தரமற்ற பொருட்கள், பெரும் ஏழை பணக்காரர் இடையிலான பாகுபாடு, அதிக வட்டி விகிதம் என்று பொது மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


ஒரு ஏழைக்குடும்பத்திற்கு கூட சென்னை போன்ற metroவில் மாதம் 20-25000 ரூ தேவைப்படுகிறது. இதில் அதிக நேர வேலை, traffic, அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனக்கோளாறுகள், சம்பளங்கள் சரியான நேரத்திற்கு வராத பிரச்சனைகள், கார்ப்பரேட்டுகளுடைய ஊழியர்களாக வேலை செய்யும் டெலிவரி ஊழியர்கள், விற்பனை பிரதிநிதிகளுடைய உழைப்பைச்சுரண்டி கமிஷன் போக அவர்களுக்கு பிச்சைப்போடுவதுபோல் சம்பளம் தரும் போக்கு என இன்னும் காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 

இனிவரும் காலங்களில் மனிதனை மனிதன் வயிற்றுப்பசிக்காக அடித்துக்கொல்லும் வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் அதில் ஒரே நல்ல விஷயம் - அப்பொழுதாவது, சாதி மதம் ஒழிந்து அடுத்த வேளை சாப்பாடு/தண்ணி/காற்று உள்ளவன் - இல்லாதவன் என்ற இரண்டே பிரிவுகளாக நிற்போம். கொரோனாவுக்கு பிந்தைய பணவீக்கம், கொரோனாவ ஏற்படுத்திய பொருளாதார தாக்கம், கோவிட், மருத்துவ கட்டண உயர்வு, மருத்துவ பொருட்கள் பற்றாக்குறை போன்றவை சாதாரண மக்கள் திருடர்களாக மாறுவதற்கான இன்னும் சில காரணங்களாக உள்ளன.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

From around the web