அரசியலுக்கு வரும் விஜய் ஆண்டனி? ரோமியோ படக்குழு சந்திப்பில் விஜய் ஆண்டனி பதில்
நடிகர் விஜய் தொடங்கி உள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
2005-ல் வெளியான ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும், நான அவன் இல்லை, பந்தயம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2012-ல் வெளியான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கதாநாயகன் விஜய் ஆண்டனி - மிருணாளினி ரவி நடித்துள்ள படம் ‘ரோமியோ’. இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வருகிற 11-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் ஆண்டனி, ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கோவையில் இன்று நடிகர் விஜய் ஆண்டனி, மிருணாளினி ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது விஜய் ஆண்டனி கூறியதாவது, “ரோமியோ படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கி உள்ளோம். ரோமியோ திரைப்படம் காதல் குறித்து விளக்குவதாகவும், திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படத்தில் தெரிவித்து உள்ளோம். பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள்.ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவதில் ஒரு தாய், மனைவி போன்றவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
நடிகர் விஜய் தற்போது தொடங்கி உள்ள அரசியல் கட்சிக்கு எனது ஆதரவு உண்டு. மேலும் அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறேன். தற்போது அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்கினால் வறுமை, சூழ்நிலை கருதி அந்த பணத்தை வாங்கி கொள்ளலாம். ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்” என தெரிவித்தார்.