'தி கேரளா ஸ்டோரி' படம்... தமிழ்நாடு திரையரங்குகளில் இன்று முதல் தடை !

 
Kerala

தி கேரளா ஸ்டோரி படம் கடும் எதிர்ப்பால், தமிழ்நாட்டில் திரையரங்குகளில் இன்று முதல் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

விபுல் ஷா தயாரிப்பில சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 
இந்தப் படத்தில் அப்பாவி இந்து பெண்களை குறிவைத்து மூளை சலவை செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும், ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதாகவும் கேரளாவை சேர்ந்த பெண்கள் பலர் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து படத்திற்கு எதிராக கண்டனம் மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகிறது. மேலும், இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல் தமிழ்நாட்டில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Kerala story
இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது. இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன.
ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், இந்த படத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழ்நாட்டில் இந்த படம் திரையிடப்படவில்லை. 
இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
TN-Govt
படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனிடையே திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழ்நாட்டில் திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

From around the web