வடியாத வெள்ளம்.. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற இருந்த ‘கலைஞர் 100’ விழா ஒத்திவைப்பு

 
Kalaingar 100

தமிழ் திரையுலகம் சார்பாக வரும் 24-ம் தேதி அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் திமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் 100 என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகம் சார்பில் வெளியான அறிக்கையில், திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், கலைஞர் அவர்கள் ஆற்றிய மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் கலைஞர்-கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் 24-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35 ஆயிரம் பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது. நடனம், நாடகம், இசைக் கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம் என்று அறிவிக்கப்பட்டது.

Kalaingar 100

எம்ஜிஆர் நினைவு நாளில் ‘காலைஞர் 100’ நிகழ்ச்சி நடத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், தன்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பார்களே அதைப்போல இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர். தன்னுடைய திரைப் படங்கள் மூலம் நல்ல சிந்தனைகளையும், கருத்துள்ள பாடல்களையும் மக்கள் மனதிலே பதிய வைத்து, மக்களை நல்வழிபடுத்திய மாபெரும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர், "எனது இதயக் கனி எம்.ஜி.ஆர்" என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் எம்.ஜி.ஆரின் தன்னலமற்ற தியாகங்களை, சாதனைகளை, பணிகளை கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Kalaingar 100

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் வெள்ள சேதத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தத்தளிக்கின்றன. இதனையடுத்து வரும் 17-ம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக இருந்த திமுக இளைஞரணி மாநாடு 24-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web