பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றிய பிரபல நடிகர்.. காவல் நிலையத்தில் புகார் அளித்த தயாரிப்பாளார்!!

 
Yogi babu

நடிகர் யோகி பாபு பணத்தை வாங்கி கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக படத் தயாரிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் நகைக்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. 2009-ல் வெளியான ‘யோகி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, பையா, மான் கராத்தே, காக்கி சட்டை, மெர்சல், கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்திலும் ஜான்சன் இயக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’ உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து ‘காண்டிராக்டர் நேசமணி’ மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து ‘லோக்கல் சரக்கு’ உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்திலும் நடித்துள்ளார்.

Yogi babu

தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பெயரிடாத படத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். அதோடு விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், பணத்தை வாங்கி கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் யோகி பாபு மீது காவல் நிலையத்தில் படத் தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் ஹாசிர். ரூபி பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் நடத்தி வரும் இவர் ‘ஜாக் டேனியல்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

Virugambakkam

இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் யோகி பாபுவிடம் ரூ. 65 லட்சம் பேசி முன்பணமாக ரூ. 20 லட்சம் தயாரிப்பாளர் ஹாசிர் காசோலையாக கொடுத்ததாகவும், இந்த நிலையில் திரைப்பட சூட்டிங் தொடங்கியதும் நடிகர் யோகி பாபுவை நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் அழைத்ததாகவும் ஆனால் யோகி பாபு வராமல் ஏமாற்றி வந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பணத்தை திருப்பி தரும்படி தயாரிப்பாளர் ஹாசிர் கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் இதையடுத்து தயாரிப்பாளர் ஹாசிர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் யோகி பாபு மீது இன்று புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web