பிரபல நடிகர் சாலையில் படுத்து திடீர் போராட்டம்.. ஆந்திராவில் பரபரப்பு!
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க போலீசார் மறுப்பு தெரிவித்த நிலையில் நடிகர் பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மாநில குற்ற புலனாய்வு துறை (சிஐடி) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஆளும் கட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வகையில் பஸ்சில் ஊர் ஊராக யாத்திரை சென்று பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் சந்திரபாபு நாயுடு, நேற்று முன்தினம் இரவு நந்தியாலா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அதன் பின்னர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அருகே பேருந்தை நிறுத்தி, அதிலேயே உறங்க சென்றார். அப்போது அங்கு வந்த நந்தியாலா போலீசார் நேற்று அதிகாலை 6 மணயளவில் சந்திரபாபு நாயுடுவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் விஜயவாடாவை நோக்கி வந்தார். பவன் கல்யாண் வருகைப் பற்றி தகவல் அறிந்த பல்லாயிரக்கணக்கான ஜனசேனா கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்க குவிந்தனர். இதனால் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக ஏற்கனவே பரபரப்பாக இருக்கும் விஜயவாடா மேலும் பரபரப்படைந்தது.
Power Star Pawan Kalyan arrested and stopped from entering Andhra Pradesh.
— Kreately.in (@KreatelyMedia) September 9, 2023
The real game begins now!#HelloAP_ByeByeYCP #PawanKalyan#PawanKalyanArrest #JanaSena pic.twitter.com/zosTD5F2wk
இந்த நிலையில் பவன் கல்யாணை சந்தித்த போலீசார் அவரை விஜயவாடாவுக்குள் வர வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். இதனால் பவன் கல்யாண் தன்னுடைய காரின் மேல் அமர்ந்த நிலையிலும், சாலையில் படுத்தும் சுமார் 2 மணி நேரம் தூங்கினார். மிக நீண்ட போராட்டத்திற்கு பின் பவண் கல்யாணை தங்களுடைய வாகனத்தில் ஏற்றிய போலீசார் அவரை வேறு பகுதிக்கு அழைத்து சென்றனர்.