‘ரத்தம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா.. மகளின் இழப்பு குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி!

 
Vijay Antony

‘ரத்தம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, முதல் முறையாக மகள் மீராவின் இழப்பு குறித்து, பேசிய தகவல்கள் வைரலாகி வருகிறது.

2005-ல் வெளியான ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும், நான அவன் இல்லை, பந்தயம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2012-ல் வெளியான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்திருந்த ‘பிச்சைக்காரன் 2’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஏற்கனவே தன்னை ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும், நடிகராகவும் நிரூபித்த விஜய் ஆண்டனி இந்த படத்தின் மூலம், இயக்குனராகவும் நிரூபித்தார்.

Vijay Antony

விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா மற்றும் லாரா ஆகிய இரண்டு மகள் உள்ளனர். இதில் மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலர் நேரடியாக சென்று மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தற்போது வரை இந்த இழப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வரும் விஜய் ஆண்டனி, அவர் நடிப்பில் அக்டோபர் 6-ம் தேதி வெளியாக உள்ள ‘ரத்தம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தன்னுடைய இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இந்த இசை வெளியீட்டு விழாவில், இந்த படம் குறித்தும், இயக்குநர் அமுதன் குறித்தும் பேசிய விஜய் ஆண்டனி, சுமார் 10 வருடங்கள் காத்திருந்து இந்த படத்தின் நடிப்பதாக தெரிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் மகளின் இழப்பு குறித்து பேசுகையில், “நான் வாழ்க்கையில் சிறுவயதில் இருந்தே நிறைய பிரச்சனைகளை சந்தித்து விட்டேன். என்னுடைய நோக்கம் அடுத்தவர்களை மகிழ்விப்பது ஒன்று தான். நிறைய காயம் பட்டு பட்டு மரத்துப் போனது போல் மாறிவிட்டேன். ஒரு அப்பாவாக தங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு ஆனால் அனைத்திற்கும் அனுபவம் தேவை. வாழ்க்கையின் எல்லா திசைகளையும் நான் பார்த்து விட்டேன். வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மறக்க வேண்டிய அவசியமில்லை மறக்க யோசிக்க வேண்டாம் நம் வாழ்க்கையே ஞாபகம் தான் நான் எதையும் மறக்க முயற்சி செய்ய மாட்டேன் வலி ஏற்பட்டால் கூட அந்த வலியோடு வாழ நினைப்பேன்” என பேசி பேசியுள்ளார்.

From around the web