10 நிமிட காட்சிக்கு 6 கோடி செலவு.. தளபதி 68 படத்தின் அப்டேட்!
வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘தளபதி 68’ படத்தில் விஜய்யை இளமையாக காட்ட டீ-ஏஜிங் தொழில்நுட்பத்திற்காக ரூ. 6 கோடி செலவு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ படத்தின் முதல் 10 நிமிட காட்சியில் இடம்பெற்ற ஹைனா சீனை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்து விடுங்க என லோகேஷ் கனகராஜ் சொல்லியிருந்தார். அந்த படத்துக்கு பிரத்யேகமாக செய்யப்பட்ட ஹைனா சிஜி தத்ரூபமாக வந்திருந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அந்த ஒரு காட்சிக்கு மட்டுமே சுமார் 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், லியோ படத்தை போலவே ‘தளபதி 68’ படத்தில் வரும் டீ-ஏஜிங் போர்ஷனுக்காக வெங்கட் பிரபு சுமார் 6 கோடி செலவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த காட்சிகள் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், படத்திற்கு ரொம்பவே முக்கியமான காட்சிகள் என்பதால் அர்ச்சனா கல்பாத்தி எந்தவொரு தடையும் சொல்லாமல் சிக்னல் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார். மேலும், சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு சம்மருக்கு தளபதி 68 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு ஹிட் அடித்ததை விட பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை தளபதி 68 அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.