தளபதி ரசிகர்களே மன்னிச்சுருங்க.. விஜய் பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட தேவதர்ஷினி!

 
Devadarshni

நடிகை தேவதர்ஷினி தனது மகளுடன் விஜய் பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்த நிலையில் வைரலாகி வருகிறது.

1997-ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனவுகள் இலவசம்’ தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவதர்ஷினி. தொடர்ந்து நாகாவின் ‘மர்மதேசம்’ என்ற மர்ம தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர், விடாத கருப்பு, ரமணி vs ரமணி, எதுவும் நடக்கும், அண்ணாமலை, சிதம்பர ரகசியம், கோலங்கள் மற்றும் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 2 போன்ற பல வெற்றிகரமான நாடகங்களில் நடித்துள்ளார்.

நாடகங்களில் நடித்து வந்த காலகட்டத்திலேயே தன்னுடன் நடித்து வந்த சக நடிகரான பிரபல நடிகர் சேத்தன் அவர்களை கடந்த 2002-ம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த சூழ்நிலையில், 2003-ல் வெளியான ‘பார்த்திபன் கனவு’ படத்தின் மூலம் அமுதா என்ற கதாபாத்திரத்தில் வெள்ளித் திரையில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தமிழக அரசு வழங்குகின்ற மாநில விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Devadarshini

இவர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் இந்த 2023-ம் ஆண்டு பிரபல நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இவர்கள் குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசாக இவர்களது மகள் நியதியும் நடிக்க வந்திருக்கிறார். ‘96’ படத்தில் தேவதர்ஷினியின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நியதி. முதல் படத்திலேயே தனது சமத்தான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இதற்கடுத்து, மலையாள படம் ஒன்றிலும் நடித்திருந்தார்.

சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கும் அவர், தனது அம்மாவுடன் சேர்ந்து விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் இருந்து ‘நான் ரெடிதான்’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். நியதி நடனத்தில் கலக்க, மகளுக்கு சமமாக தேவதர்ஷினியும் இந்த வீடியோவில் அசத்தியுள்ளார். 'தளபதி ரசிகர்கள் மற்றும் லியோ பட ரசிகர்கள் மன்னிக்க’ எனக் கூறி இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

From around the web