ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கும் தல தோனி..? LGM பிரஸ் மீட்டில் சாக்ஷி தோனி

 
Dhoni

பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி நடிக்கும் படம் ஆக்சன் படமாக இருக்கும் என அவரது மனைவி சாக்ஷி தெரிவித்தார்.

கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், ராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி தோனி படத் தயாரிப்பில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அந்த வகையில் தோனி என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “Lets Get Married” என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வரும் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த இவானா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 80’ஸ் நாயகி நதியாவும், ட்ரெண்டிங் காமெடி நடிகர் யோகி பாபு என பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

தமிழில் விட்னெஸ், தெலுங்கில் அஹம் பிரம்மாஸ்மி படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்க, அவரே படத்திற்கும் இசையும் அமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 10-ம் தேதி சென்னையில் நடந்தது. இதில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி கலந்து கொண்டனர்.

LGM

இந்த நிலையில் இந்த படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகைகள் நதியா மற்றும் இவானா, இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி தயாரிப்பாளர் சாக்‌ஷி தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய ஹரிஷ் கல்யாண், என்னுடைய திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எந்த படம், எப்போது தியேட்டரில் வெளியாகும் என காத்துக் கொண்டிருந்தேன். இப்போது எல்.ஜி.எம் திரைப்படம் வெளியாகிறது. விஜய், ரஜினி படங்களை முதல் நாள் முதல் காட்சி திரையரங்கில் சென்று பார்ப்பேன்.

தற்போது சின்ன திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகின்றன. அந்த வகையில் இந்த திரைப்படம் ரசிகர்களை கவரும் என தெரிவித்தார். அதேபோல் நமக்கு Dhoni not a Personality, Its a Emotion. அவர் முதன்முதலாக தயாரிக்கும் படத்தில் நான் நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார். நடிகை இவானா பேசுகையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் நடந்தது, குடும்ப உறுப்பினர்கள் போல் அனைவரும் பழகினர். படப்பிடிப்பில் இருக்கும் உணர்வே இல்லை என்றார்.


இவர்களை தொடர்ந்து பேசிய இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, “இந்த திரைப்படத்தின் ஐடியா சாக்ஷி தோனியுடையது. அவர் சொன்ன விஷயத்தை நான் கதையாக மாற்றி கூறினேன். அது தோனிக்கு பிடித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த LGM திரைப்படம் உருவானது” என்றார். பின்னர் யோகி பாபுவின் காட்சிகள் குறித்து பேசிய அவர், “அவருக்கு இவானா மேல் என்ன காண்டு என்று தெரியவில்லை. அவரை வெச்சு செய்து விட்டார்” என்றார்.

இறுதியாக பேசிய சாக்‌ஷி தோனி, எங்களுக்கு மொழி தடை கிடையாது. இங்கு (தமிழ்நாட்டில்) கிடைக்கும் அன்பு அளப்பரியதாக இருக்கிறது. தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தை எங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே எங்கள் நிறுவனத்தை எங்கு இருந்து தொடங்கினோம் என்று திரும்பி பார்க்கும் பொழுது, அதை இங்கிருந்து (தமிழ்நாட்டில்) தொடங்கினோம் என்று நினைவு கொள்ளும் போது மகிழ்ச்சி அடைவோம். தோனியை வைத்து படம் எடுத்தால் அது ஆக்சன் படமாக இருக்கும். நல்ல விஷயங்களை சொல்லக்கூடிய நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பது குறித்து தோனி பரிசீலனை செய்வார். தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலமாக தோனி சினிமாவில் நுழைந்து இருப்பது என் விருப்பம் என்று பேசினார்.

From around the web