காலையிலேயே கண்ணீர் செய்தி.. காலமானார் பிரபல நடிகர் டெல்லி கணேஷ்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Delhi Ganesh

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.

1976-ல் திரைத்துறைக்கு வந்த டெல்லி கணேஷ், தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் ‘டெல்லி’ நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றினார். பின்னர் 1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பட்டினப் பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமானார்.

Delhi Ganesh

டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 1979-ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 - 1994 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் ‘கலைமாமணி விருது’ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.

Delhi Ganesh

டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கிய நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று (நவ. 9) இரவு 11.30 மணியளவில் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அவரது ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பலரும் வருகை புரியவுள்ளனர். அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

From around the web