தமிழ் vs கன்னடம்.. நீதிமன்றம் சென்ற கமல்ஹாசன்!!

 
Kamal Simbu Kamal Simbu

தமிழ் மொழியிலிருந்து தான் கன்னட மொழி உருவானது என்று பேசிய நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், தக் லைஃப் படத்தை வெளியிட பாதுகாப்பு கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. தனது கருத்துக்காக கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்கத் தவறினால், ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படுவதைத் தடுப்போம் என்றும் அவர்கள் மிரட்டினர்.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலு, "கன்னட அமைப்புகளின் கோரிக்கையின்படி நடிகர் கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் தனது பேச்சுக்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கப்பட மாட்டாது. மன்னிப்பு கேட்காவிட்டால் நிச்சயம் 100% அந்த படம் திரையிடப்படாது" என தெரிவித்தார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களிடையே ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை ஏற்படுத்தும் வகையில் பேசிய நடிகர் கமலின் கருத்து திரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் படம் திரையிடப்படுவதைத் தடுக்கவோ அல்லது தடை செய்யவோ எந்தவொரு தனிநபர், குழு அல்லது அதிகாரத்தையும் தடை செய்ய உத்தரவிட வேண்டும். திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அச்சுறுத்தல்கள் அல்லது இடையூறுகளிலிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web