‘லியோ’ சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி.. விஜய் ரசிகர்கள் ஹேப்பியோ ஹேப்பி!

 
Leo

விஜய் நடித்துள்ள லியோ படத்துக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leo

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லியோ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனிடையே படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுமாக என்பது குறித்து கேள்வி எழுந்தது.

தமிழ்நாட்டில் தற்போது படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சமீபத்தில் வெளியான உதயநிதியின் மாமன்னன், ரஜினிகாந்தின் ஜெயிலர் உள்ளிட்ட படங்களுக்கு கூட சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதில் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லாததது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் லியோ படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

Leo

அதற்கு ஏற்றார்போல் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்றும், தமிழ்நாட்டில் லியோ படம் காலை 10 மணிக்கு தான் வெளியாகும் என்றும் கூறப்பட்ட நிலையில், சிறப்பு காட்சிக்காக அக்டோபர் 18-ம் தேதியே மாலை சிறப்பு காட்சி திரையிடப்படும் என்றும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்த நிலையில், தற்போது லியோ படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சி அனுமதி அளித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கு காலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை 5 நாட்கள் வரை தினரி 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அனுமதி விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web