விவாகரத்து பெறுவதில் உறுதி.. குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா தகவல்!

 
Dhanush - Aishwarya

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.

2002-ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான இவர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் 2004-ம் ஆண்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், 2022-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். 

தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியின் இந்த அறிவிப்பு அவர்களது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் பொருட்டு இருவீட்டாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.

Dhanush-Aishwarya

பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், தனுஷ் - ஐஸ்வர்யாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. 

இதையடுத்து அந்த மனு நீதிபதி சுபாதேவி முன்னிலையில் கடந்த 2-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை 21-ந் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டார்.


இந்த நிலையில், விவகாரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜரானார். அப்போது தனுஷ் வந்துகொண்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்த நிலையில் விசாரணையை 12 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

From around the web