திடீரென்று எல்லாம் மாறிவிட்டது.. பெண் குழந்தைக்கு அப்பாவானார் பிரபல யூடியூபர் இர்பான்!

பிரபல யூடியூபர் இர்பானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமானவர் யூடியூபர் இர்பான். இவர் இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் சினிமா விமர்சனங்களை செய்து வந்த அவர், அதற்கு வரவேற்பு கிடைக்காததால், பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து, அதனை வீடியோவாக வெளியிட தொடங்கினார்.
தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு சென்று பல வீடியோக்களை பகிர்ந்துள்ள அவர், வெளிநாடுகளுக்கும் சென்றும் அங்கும் பல ஹோட்டல்களில் சாப்பிட்டு வீடியோக்கள் பகிர்ந்துள்ளார். தற்போது இர்பான் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி அந்த வீடியோக்களையும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் தன்னுடைய ரசிகர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை பாலினம் குறித்து துபாயில் டெஸ்ட் எடுத்து அதை அறிவித்து விழா நடத்தினார். கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவது இந்தியாவில் சட்டப்படி குற்றம் என்பதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுந்தன. ஆனால் இது குறித்த வீடியோவை இர்பான் நீக்கியதை அடுத்து பிரச்சனை முடிவடைந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இர்பான் தனது சமூக வலைதளத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளார். ஏற்கனவே பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதற்காக தான் முன்கூட்டியே அவர் பார்ட்டி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குழந்தையின் விரலை பிடித்தவாறு எடுத்த புகைப்படத்தை இர்பான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ‘திடீரென்று எல்லாம் மாறிவிட்டது! என் இளவரசி இப்போது இங்கே இருக்கிறாள், என் பெண் குழந்தை! என்ன நல்லது பண்ணியிருக்கேன்னு தெரியல, எனக்கு இப்பிடி ஒரு சந்தோசம் கெடச்சுருக்கு.. என் குடும்பம் வளர்ச்சி அடைந்துள்ளது’ என்று எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.