பிரச்சாரத்தின் போது திடீர் உடல்நலக்குறைவு.. நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

 
Mansoor Ali Khan Mansoor Ali Khan

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Mansoor-Ali-Khan

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தேர்தலில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். அதனோடு தான் பாஜகவுக்கு எதிரானவன் என்ற கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்தார்.

Mansoor Ali Khan

அப்போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து காட்சிகள் தற்போது வெளியான நிலையில் மக்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web