‘சர்தார் 2’ படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர்.. நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி!

‘சர்தார் 2’ படப்பிடிப்பில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார் 2’. இந்தப் படத்தில் கார்த்தி, அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்து வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் (ஜூலை 16) நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்தில் இருந்து சண்டைப் பயிற்சியாளரான ஏழுமலை என்பவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த அடிபட்டுள்ளது.
உடனடியாக படக்குழுவினர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏழுமலையை அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஏழுமலை சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அப்பா கார்த்தி சார் வந்திருக்காருப்பா உன்ன பாக்க, எழுந்துருப்பா.. கதறி அழுத பெண்.. சர்தார் - 2 படப்பிடிப்பின் போது 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நேரில் அஞ்சலி... ஆறுதல் சொல்ல முடியாமல் கண் கலங்கியபடி நின்ற நடிகர் கார்த்தி...… pic.twitter.com/S2CFFn9c93
— Polimer News (@polimernews) July 18, 2024
இந்த நிலையில், உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, அப்பா கார்த்தி சார் வந்திருக்காருப்பா உன்ன பாக்க, எழுந்துருப்பா.. கதறி அழுத பெண்.. ஆறுதல் சொல்ல முடியாமல் கண் கலங்கியபடி நடிகர் கார்த்தி நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.