எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை! உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

இயற்கை என்னும் இளைய கன்னி, ஆயிரம் நிலவே வா பாடல்கள் மூலம் தமிழ்த்திரையுலகில் பின்னணிப் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகத் தமிழர்களின் வாழ்வில் ஒன்றாகிப் போனார். எஸ்.பி.பி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். இசைஞானி இசையில் எஸ்.பி.பி - ஜானகி பாடல்கள் தனித்துவம் வாய்ந்தவை.
அண்ணாமலை படத்திற்குப் பிறகு ஒவ்வொரு ரஜினி படத்திற்கும் டைட்டில் பாடல் பாடுவது எஸ்.பி.பி தான் என்ற எழுதப்படாத சட்டமே தமிழ்த்திரையுலகில் உருவானது. தர்பார் படம் வரையிலும் எஸ்.பி.பி யின் டைட்டில் பாடல்கள் தொடர்ந்தது.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மறைந்து விட்டார் எஸ்.பி.பி. கொரோனா தந்த கொடூரமான இழப்புகளில் எஸ்.பி.பி.யும் ஒருவர்.
அவருடைய சாதனையைப் போற்றும் வகையில், அவர் வசித்த வீடு அமைந்துள்ள சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கம்தார் நகர் மெயின் ரோட்டுக்கு எஸ்.பி.பியின் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து காம்தார் நகர் மெயின் ரோட்டுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை என்று பெயர்சூட்டப்பட்டு அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டது. இந்த பெயர்ப்பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.