பாதரியார் குறித்து அவதூறு வீடியோ.. பிரபல சண்டைப் பயிற்சியாளர் கைது..!

 
Kanal Kannan

மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை தமிழ் பாடலுடன் எடிட் செய்து ட்விட்டரில் பதிவிட்ட வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை நேற்று சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வரும் கனல் கண்ணன், அக்கட்சியின் கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி மாலை தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு பேசிய கனல் கண்ணனின் பேச்சு, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில், மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோவும், அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் வெளிநாட்டு மத கலாசாரம் இது தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Kanal Kannan

இதனை பார்த்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு கனல் கண்ணன் ஆஜரானார். ஆனால் அங்கு விசாரணை தாமதமானது. இதனை தொடர்ந்து அவருக்கு மதிய உணவு வழங்கவில்லை எனவும், விசாரணையை போலீசார் அதிக நேரமாக இழுத்தடிப்பதாக கூறி இந்து முன்னணி மற்றும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து திடீரென அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Kanal Kannan

இந்த பரபரப்புக்கு இடையே மாலை 6 மணி வரை கனல் கண்ணனிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை முடிவடைந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கனல் கண்ணனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் நாகர்கோவிலில் உள்ள 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக கனல் கண்ணன் கூறுகையில், “எனது ட்விட்டர் கணக்கில் நான் பதிவிட்ட வீடியோ எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளேன். ஆனால் போலீசார் முறையான விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் போலீசாரிடம் வழங்கியுள்ளேன். இது தொடர்பாக எந்த பிரச்சினை வந்தாலும் அதனை சட்டரீதியாக சந்திப்பேன்” என்றார்.

From around the web