இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா.. வைரலாகும் தகவல்! 

 
Kamal - SJ Suriyah

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டே துவங்கிய இந்தப் படம் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. மேலும் லைக்காவுக்கும் ஷங்கருக்கும் பட்ஜெட் தொடர்பான முரண் காரணமாகவும் இந்தப் படம் தாமதமானதாக கூறப்படுகிறது.

ஒரு வழியாக சிக்கல்கள் தீர்ந்து ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து சமீபத்தில் தைவான் நாட்டிற்கு சென்ற இந்தியன் 2 படக்குழு, பாடல் காட்சிகளை படமாக்கினர். 

Indian 2

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா சென்ற கமல் மற்றும் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றை படமாக்கி வந்தனர். பழங்கால ரயில் ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. 

அதை தொடர்ந்து படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து படத்திற்கான இசையை உருவாக்கி வரும் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய வில்லனாக பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் நடித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் மெயின் வில்லன் குறித்த ரகசியத்தை இதுவரை படக்குழுவினர் கட்டி காத்து வந்த நிலையில் தற்போது அந்த வில்லன் எஸ்.ஜே.சூர்யா என்பது தெரிய வந்துள்ளது.

SJ Suryah

அவர் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முழுமையாக முடித்து விட்டதாக கூறப்படுகிறது. கதாநாயகனாக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது சில படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆனால் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக அவர் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

From around the web