சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அமரன்’ படத்தின் டீசர் வெளியீடு! டீசர் எப்படி?

 
Amaran Amaran

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும்  ‘எஸ்கே21’ படத்துக்கு ‘அமரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘அயலான்’. இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை ‘ரங்கூன்’ திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

அவரது 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

Amaran

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘அமரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

டீசர் எப்படி? தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படம். கோலிவுட்டில் தேசபக்தி அலை ஓய்ந்த நிலையில், தற்போது அதனை சிவகார்த்திகேயன் கையிலெடுத்திருக்கிறார். காஷ்மீர் மக்கள் இந்திய ராணுவப் படையை பிடித்து அவர்களை கொலை செய்வது போல டீசர் தொடங்குகிறது. அவர்களின் சுதந்திர முழக்கம் ஒலிக்கப்படுகிறது. துப்பாக்கி, குண்டு வெடிப்பு, ரத்தம், தெறிக்கும் தோட்டா என பயணிக்கும் டீசரில், “இதான் இந்தியன் ஆர்மி முகம்னு காட்டு”, “தீவிரவாதம்” போன்றவை இந்தியா, தேசபக்தி போன்ற பதங்களை உறுதி செய்கின்றன.

ராணுவ கதாபாத்திரத்துக்கு ஏற்ற சிவகார்த்திகேயனின் உடலமைப்பு கவனிக்க வைக்கிறது. இந்தியில் தேசபக்தி, தீவிரவாதம் தொடர்பான படைப்புகள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கோலிவுட்டிலும் இந்தப் போக்கு தொடங்கியிருக்கிறது. கமல்ஹாசன் தயாரிப்பும் கவனிக்க வைக்கிறது. காஷ்மீர் மக்களின் விடுதலை பற்றி படம் பேசுகிறதா அல்லது அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறதா என்பதை படம் வந்த பின்பு தெரியவரும்.

From around the web