அதிர்ச்சி.. பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் மாரடைப்பால் மரணம்..!
பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் உஷா உதுப். 1960-ம் ஆண்டு தொடங்கிய இவரது இசைப்பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர் தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான மேல்நாட்டு மருமகள், இதயக்கனி, ஊருக்காக உழைப்பவன் ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையில் உருவான அஞ்சலி படத்தில் ‘வேகம் வேகம் போகும் நேரம்’ என்ற பாடலை பாடியுள்ளார். தமிழில் மன்மதன் அம்பு படத்தில் உஷா உதுப் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒன்றிய அரசு உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. உஷா உதுப் மற்றும் ஜானி சாக்கோ இருவரும் சந்தித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜானி சாக்கோவிற்கு முன்பாகவே உஷா உதுப்பிற்கு ராமு என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் அவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து , ஜானி சாக்கோவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஜானி சாக்கோ வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்த போது திடீரென வியர்ப்பது போலவும், அசௌகரியாக இருப்பதாக கூறியதை அடுத்து குடும்பத்தினர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரின் இறுதிச் சடங்குகள் இன்று கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜானி சாக்கோவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து, உஷா உதுப்பிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.