அதிர்ச்சி! சார்லி சாப்ளின் மகள் நடிகை ஜோசபின் சாப்ளின் காலமானார்!

 
Josephine Chaplin

மறைந்த சார்லி சாப்ளின் மகள் நடிகை ஜோசபின் சாப்ளின் காலமானார். அவருக்கு வயது 74.

உலக புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. அவரது ‘லிட்டில் டிராம்ப்’ பாத்திரம் ஒரு சின்னமான நகைச்சுவை படைப்பாக உள்ளது. மௌனப் பட சகாப்தத்தின் மிகவும் பிரபலமான நடிகராக அவர் விளங்கினார்.

மியூசிக் ஹால் கேளிக்கையாளர்களின் குடும்பத்தில் பிறந்த சார்லி சாப்ளின் தனது 5 வயதில் மேடையில் தோன்றினார். 14 வயதில், சாப்ளின் லண்டனின் வெஸ்ட் எண்டில் நாடகங்களில் மேடையில் நடிக்கத் தொடங்கினார். அதன்பின், ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகராக ஆனார்.

Josephine Chaplin

பின்னர் நடிகை ஊனா ஓ நீல் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பிறந்த 8 குழந்தைகளில் 3-வது குழந்தையாக 1949-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா மோனிகா நகரில் பிறந்தவர் ஜோசபின் சாப்ளின்.

பிரபல நடிகையாக வலம் வந்த ஜோசபின் 1952-ஆம் ஆண்டு சாப்ளின் இயக்கி, தயாரித்து நடித்த ‘லைம்லைட்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சார்லி, ஆர்தர் மற்றும் ஜூலியன் ரோனட் என 3 மகன்கள் உள்ளனர்.

RIP

ஜோசபின், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இவர் கடந்த 13-ம் தேதி காலமானார். இவரது மறைவை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜோசபின் இறுதி சடங்கில் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web