அதிர்ச்சி!! ஏலத்திற்கு வருகிறதா நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அன்னை இல்லம்??

 
Annai Illam

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்து வந்த அவருடைய அன்னை இல்லம் வீடு ஏலத்திற்கு விடப்படும் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வந்துள்ளது.

சென்னை மாகாணத்தின் தலைமைச் செயலாளராகவும், பின்னர் ஒரிஸ்ஸா மாகாணத்தின் கவர்னர் ஆகவும் இருந்த ஜார்ஜ் டி. போக் வசித்து வந்த இல்லம் தான் சிவாஜி கணேசனின் தற்போதைய அன்னை இல்லம். ஜார்ஜ் டி.போக் பெயராலே அந்த சாலையும் போக் சாலை என்றழைக்கப்பட்டது. ஜார்ஜ் டி போக் இடமிருந்து சென்னை மாகாணத்தின் தற்காலிக கவர்னாரக இருந்த வெங்க்ட ரெட்டி நாயுடு வாங்கினார். பின்னர் மூக்குப்பொடி தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான ஒரு இஸ்லாமிய குடும்பம் வாங்கியது. அவர்களிடமிருந்து சிவாஜி கணேசன் இந்த வீட்டை வாங்கினார். 

பாரம்பரியம் மிக்க இந்த வீட்டில் சிவாஜியும் அவருடைய தம்பியும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சிவாஜி அவருடைய மனைவி கமலா அம்மாள் மறைவுக்குப் பிறகு சிவாஜி மற்றும் அவருடைய தம்பி குழந்தைகள் அங்கே வசித்து வருகின்றனர். சிவாஜி குடும்பம் பண நெருக்கடியில் தவித்த போது தான் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் சிவாஜி புரொடக்‌ஷன்ஸில் நடித்தார். அதன் பின்னர் அந்தக் குடும்பத்திற்கு பண நெருக்கடி இருந்ததாகத் தெரியவில்லை. பிரபுவும் படங்களில் மீண்டும் குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் நடிக்கத் தொடங்கினார்.

பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் தும் நடிகராக அறிமுகம் ஆனார். ஆனால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தை மனைவியுடன் சேர்ந்து தொடங்கிய துஷ்யந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தார். படத்திற்காக ஃபைனான்சியரிடம் 30 சதவீத வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இரண்டு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஆனால் படத்தை முடித்து வெளியிட முடியவில்லை.

பணத்தைத் திருப்பிக் கேட்ட போது திருப்பிச் செலுத்த முடியாததால், பணத்தைக் கொடுத்த ஃபைனான்சியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். படத்தின் உரிமையைக் கொடுத்து கடனை சரி செய்து கொள்ளும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது. தயாரிப்பு தரப்பில் படம் முடிவடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் மீண்டும் நீதிமன்றம் சென்ற ஃபைனான்சியர்கள் அன்னை இல்லத்தை ஏலம் விட்டு கடனை செலுத்தும்படி கோரிக்கை விடுத்தனர். நீதிமன்றத்தில் துஷ்யந்த் தரப்பில் ஆஜராகவில்லை என்பதால் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஏலத்தில் விட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு திரையுலகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.