பாலியல் புகார் எதிரொலி.. ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் ஜானி மாஸ்டர் கடந்த சில ஆண்டுகளாக ஏகப்பட்ட ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படத்தில் அவர் உருவாக்கிய புட்ட பொம்மா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், விஜய்யின் பீஸ்ட், வாரிசு படங்களுக்கு அவரையே கொரியோகிராஃபராக ஒப்பந்தம் செய்தார் விஜய். திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் ஜானி மாஸ்டர் வென்றார்.
ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக் கலைஞராக இருந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனியாக நடன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். 21 வயதான அவர் துணிச்சலுடன் ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்ததுடன், ராயதுர்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் நடன இயக்குனர் ஜானி பாஷாவிடம் நான் நடன கலைஞராக வேலை செய்து வந்தேன். அப்போது சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த படப்பிடிப்பின் போது என்னை ஓட்டல்களில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் நர்சிங்கியில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்தார் என கூறியிருந்தார்.
இதனையடுத்து, அவரை தனது ஜன சேனா கட்சியில் இருந்து நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் நீக்கினார். இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்ட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது, போக்சோ வழக்கும் பாய்ந்தது. இதனைத்தொடர்ந்து, தலைமறைவான ஜானி மாஸ்டரை பெங்களூருவில் கைது செய்த போலீசார், அவரை ஐதராபாத் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைந்தனர்.
இந்த சூழலில், தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக நடன இயக்குநர் ஜானிக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை குடியரசுத்தலைவர் மாளிகையில் தேசிய விருது வழங்கப்பட இருந்த நிலையில், திடீர் திருப்பமாக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.