ஆர்ஆர்ஆர் பட வில்லன் நடிகர் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Ray Stevenson

‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார். அவருக்கு வயது 58.

1964-ம் ஆண்டு வடக்கு அயர்லாந்தின் லிஸ்பர்னில் பிறந்த ஸ்டீவன்சன், 1990-களின் முற்பகுதியில் ஐரோப்பிய தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டெலிஃபிலிம்களில் நடித்ததன் மூலம் சினிமா வாழ்க்கையில் அடியெடுத்துவைத்தார். 1998-ல் வெளியான ‘தி தியரி ஆஃப் ஃபளைட்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 

Ray Stevenson

2022-ல் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், மார்ச் 25ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது.

இந்தப் படத்தில் வரும் ‘சர் ஸ்காட்’ என்ற ஆங்கிலேயர் கேரக்டரில் நடித்தவர் நடிகர் ரே ஸ்டீவன்சன். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஸ்டீவன்சன் ஏற்று நடித்திருந்த எதிர்மறையான பாத்திரமும், அவரின் நடிப்பும் வரவேற்பைப் பெற்றது. மார்வெலின் ‘தோர்’, பிரபல வெப் சீரிஸான ‘வைக்கிங்ஸ்’ போன்றவற்றிலும் நடித்துள்ளார்.


இந்த நிலையில், உடல் நலக்குறைவால் அவர் இத்தாலியில் நேற்று காலமானார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படக் குழு, “அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி,  ரே ஸ்டீவன்சன், நிம்மதியாக ஓய்வெடுங்கள். நீங்கள் எங்கள் இதயங்களில் SIR SCOTT-ஆக என்றென்றும் இருப்பீர்கள்” என்று பதிவிட்டுள்ளது.

From around the web