ராமர் கோவில் குடமுழுக்கு.. இன்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் தீவிரவாதி என்பார்கள்.. இயக்குநர் பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு
இன்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் தீவிரவாதி ஆகிவிடுவோம் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கே.ஜி.எஃப்-ஐ மையமாக வைத்து வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக தங்கலான் உருவாகி வருகிறது.
இதனிடையே இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார். அவர், ‘இன்று முக்கியமான நாள், வீட்டில் சென்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது.
இன்னும் 5 - 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப்போகிறோம் என்கிற பயத்தை உணர்த்துகிறது. அதுபோன்ற காலக்கட்டத்தில் நுழையும் முன்பு நம் மூளையில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும் தினம் தினம் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கிற மதவாதத்தையும் அழிக்க வேண்டும். அதனை அழிப்பதற்கு நம்மிடம் இருக்கும் கருவியாக கலையை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.
இன்று ராமர் கோவில் திறப்பை ஒட்டி அதன் பின்னால் நடக்கும் மத அரசியலை நாம் கவனிக்க வேண்டும். மக்கள் மனதில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பிற்போக்குத் தனத்தை இந்த கலை சரி செய்யும் என்று நாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையோடுதான் இந்த கலையை நாம் கையாள்கிறோம்’ என்று தெரிவித்தார்.