மன்னித்துவிடுங்கள்.. திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினிகாந்த்!
திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்விக்கு கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினிகாந்த் 'மன்னித்துவிடுங்கள்' என்று கூறி சென்றார்.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை ஒன்றிய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்யப்பட்டத்தில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.
சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “ஞானவேல் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘வேட்டையன்’ படம் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதை எல்லாம் படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங் அதிகமாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் சந்தோஷமாக உள்ளது. ’தர்பார்’ படத்திற்குப் பின்பு ‘வேட்டையன்’ படத்தில் தான் முழு நீள போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்” என்றார்.
#WATCH | “வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை இருக்கு..!”
— Sun News (@sunnewstamil) September 28, 2024
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி#SunNews | #Vettaiyan | #Rajinikanth | @rajinikanth pic.twitter.com/fGd2samN90
அதன் பின்னர் ரஜினியிடம் செய்தியாளர்கள் “நீங்கள் ஒரு ஆன்மிகவாதி. திருப்பதி லட்டு விவகாரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிய போது, “மன்னித்து விடுங்கள்! நோ கமெண்ட்ஸ்” என்று சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.