படிக்காதவன் படத்தில் நடித்த குட்டி வயது ரஜினி மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 
Suriyakiran

படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த சூர்யகிரண் காலமானார். அவருக்கு வயது 48.

1978-ல் வெளியான ‘சிநேகிக்கன் ஒரு பெண்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் சுரேஷ். தொடர்ந்து 1980-ல் வெளியான ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் மௌன கீதங்கள், சத்யபாமா, கடல் மீன்கள், ரங்கா, முந்தானை முடிச்சு. படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தென்னிந்திய சினிமாவில், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா என பல சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் படத்தில், சிறுவயது ரஜினியாக, நடித்து ஸ்டைலில் அசத்தி இருப்பார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்துள்ளார்.

Surya kiran

இவருக்கு நடிப்பதைவிட, இயக்குனர் ஆவதில் ஆர்வம் அதிகமாக இருந்ததால், இயக்கம் பக்கம் சென்றார். இதற்காக கமலஹாசனிடமும், ரவி தேஜாவிடமும் ஸ்கிப்ட் ரைட்டிங்கை கற்றுக்கொண்ட இவர், கவிதா முதல் கல்பனா வரை என்ற படத்தை இயக்கினார். தெலுங்கில் இவர் இயக்கிய நிஜாம் தேடு செஜாபாலி படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையடுத்து, 2003-ல் சுமந்த் மற்றும் ஜெனிலியா டிசோசா நடித்த சத்யம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் தானா 51, பிரம்மாஸ்திரம், ராஜு பாய் மற்றும் அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கினார். ஆனால், அதன் பின் இவர் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்ததால், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சூரியா கிரண், இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பிக் பாஸ் கலந்து கொண்டிருந்தார்.

Surya kiran

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியிலில், தனம் என்ற அண்ணி கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதாவின் அண்ணன் ஆவார். சுஜிதாவும் குழ்ந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல், நடிகை காவேரியின் முன்னாள் கணவரும் ஆவார். நடிகை காவேரி சமுத்திரம் படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்திருந்தார். நடிகை காவேரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோய் தாக்குதலுக்கு உட்பட்ட சூரிய கிரண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோயின் தாக்கம் அதிகமானதால் இன்று வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில் காலை 11 மணி அளவில் அவர் உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web