ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

ராகவ லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் ‘சந்திரமுகி’. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘சந்திரமுகி’ பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.
இந்த நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர்.ஜி.ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விருந்தாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
We are thrilled to announce that the doors to the much awaited sequel Chandramukhi 2 🗝️ will be open from Ganesh Chaturthi 🤗✨
— Raghava Lawrence (@offl_Lawrence) June 29, 2023
Releasing in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada!
#Chandramukhi2 🗝️ pic.twitter.com/hoM7BXxWp2
செப்டம்பர் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சரியான தேதியை படக்குழுவினர் லாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.