‘புஷ்பா 2’ படத்தின் 2வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு.. மிரட்டலான அப்டேட் கொடுத்த படக்குழு!
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தின் 2வது பாடல் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
2021-ல் சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. புஷ்பா தி ரூல் (புஷ்பா 2) என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் 8-ம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘சூசெகி (The Couple Song)’ என்ற பாடல் வருகிற 29-ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.