பிரமோஷனுக்காக ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற பிரசாந்த்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்!

 
Prasanth

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணம் மேற்கொண்ட நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது பின்னால் அமர்ந்து சென்ற தொகுப்பாளர் ஆகியோருக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 9-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் அந்தகன். இந்த படம் முதலில் ஆகஸ்ட் 15=ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டது. இதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தினை ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து நேற்று அறிவித்துள்ளது. இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படம் பிரசாந்த்தின் 50வது படம்.

இந்த படத்தினை பிரசாந்த்தின் தந்தையான தியாகராஜன் தயாரித்தும் இயக்கியும் உள்ளார். படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, வனிதா விஜயகுமார், பெசண்ட் நகர் ரவி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோ பாடலை விஜய் வெளியிட்டார்.

Andhagan

இந்தப் படத்தின் பிரமோஷன்களில் பிரசாந்த் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகளை கொடுத்து வரும் அவர், முன்னதாக கார் ஓட்டியபடி பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது பைக் ஓட்டியபடி ஒரு பேட்டியை அவர் கொடுத்துள்ளார். இந்த பேட்டியின் போது ஹெல்மெட் அணியாமல் பிரசாந்த் பாண்டிபஜார் சாலைகளில் ரசிகர்களுக்கு கைகாட்டிய படி சென்றிருந்தார். அவருக்கு பின்னால் இருந்த ஆங்கரும் பைக் பின்னால் ஹெல்மெட் இல்லாமல் உட்கார்ந்து கொண்டு பேட்டி எடுத்ததையும் பார்க்க முடிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அடுத்தடுத்து கண்டனங்கள் எழுந்தன. சாதாரண மக்களுக்கு மட்டும்தான் விதிமுறைகளா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் பிரசாந்துக்கு பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கூடவே பின்னால் ஹெல்மெட் அணியாமல் உட்கார்ந்திருந்த தொகுப்பாளினிக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் அந்தகன் படம் வெளியாகவுள்ள நிலையில், அவர் இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது.


முன்னதாக பேட்டிக்காக மட்டுமே தான் ஹெல்மெட் போடவில்லை என்றும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்தால் சரியாக கேட்காது என்பதே காரணம் என்றும் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்ட வேண்டாம் என்றும் பாதுகாப்பே முக்கியம் என்றும் பிரஷாந்த் கூறியுள்ளார்.

From around the web