மோடியின் பயோபிக்கில் பிரபல தமிழ் நடிகர்.. பாஜகவினர் அதிர்ச்சி!
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1978-ல் கமல் நடிப்பில் வெளியான ‘சட்டம் என் கையில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சத்யராஜ். ஆரம்ப காலத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த இவர், கடலோரக் கவிதைகள், அண்ணா நகர் முதல் தெரு, வாழ்க்கை சக்கரம், நடிகன், அமைதிப்படை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது பரபரப்பான குணச்சித்திர நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மோடியாக, தமிழ் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. சத்யராஜ் இதில் ஹீரோவாக நடிக்க இருக்கும் தகவல், ரசிகர்கள் இடையே தற்போது வைரலாகி வருகிறது.
நரேந்திர மோடியின் பயோபிக் குறித்த செய்தியை பெரும்பாலான சினிமா விமர்சகர்கள் மற்றும் சினிமா தொடர்பாளர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றனர். இவர்களில் பலர் சத்யராஜின் மகன், சிபி ராஜையும் டேக் செய்திருக்கின்றனர். இதனால், இது உண்மையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
பாலிவுட்டில் பிரம்மாண்டமான அளவில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படத்தில் சத்யராஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முற்போக்கு சிந்தனைகளை கொண்ட, சினிமா பிரபலங்களுள் ஒருவர் சத்யராஜ். 2007ஆம் ஆண்டு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவான திரைப்படத்தில் இவர்தான் பெரியாரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேக்-அப் போட்ட பிறகு அப்படியே அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப பொருந்தி போனார். படத்தில் மட்டுமன்றி, நிஜ வாழ்க்கையிலும் பெரியாரின் கொள்கைகளை உடையவர் இவர்.
எந்த மேடை ஏறினாலும், பயமே இன்றி நாத்திகம் பேசும் இவர் தற்போது மோடியாக நடிக்க இருக்கும் தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் ரசிகர்கள், பணத்தை வாங்கிக்கொண்டு தன் கொள்கைகளை கூட இப்படி ஓரு சிலர் மாற்றிக்கொள்கின்றனரே என மனம் நொந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.