தெறி இந்தி ரீமேக் பட பூஜை.. தயாரிப்பாளரான அட்லீ.. விஜய் - சமந்தா ரோலில் நடிக்க போறது யார் தெரியுமா?

 
Theri

விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ள நிலையில், இதன் பட பூஜை இன்று கோலாகலமாக தொடங்கியது.

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் என பல வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். தமிழ் ரசிகர்களை வளைத்துப் போட்டிருந்த இவர், இன்று பாலிவுட் டாப் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளார். நடிகர் ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ஜவான் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி வெளியாகி கலெக்ஷனை அள்ளியது.

இந்த படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனமே மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாக ஜவான் படத்தை தயாரித்தது. இப்டபத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி என தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர்களை வைத்தே ஜவான் படத்தை இயக்கி இருந்தார் அட்லீ. இதனால் இப்படம் எப்படி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் தமிழ் ரசிகர்களும் இருந்தது.

Theri

இந்நிலையில், ஜவான் படத்தின் மகத்தான வெற்றியால் பாலிவுட்டில் கடைவிரித்து இருக்கும் அட்லீ தற்போது தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இன்று இப்படத்திற்கான பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜையில் அட்லீ, பிரியா அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி மற்றும் தயாரிப்பாளர் முராத் கேதனி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியில் ரீமேக்காக உள்ள தெறி ரீமேக்கிற்கு அட்லீ தான் தயாரிப்பாளர் இவரது தயாரிப்பில் ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றன.

மேலும் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எமி ஜாக்சன் நடித்த வேடத்தில் வாமிகா நடிக்க உள்ளதாகவும், மற்ற  பிற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் போல் விஜய்க்கு இந்த படத்தில் வில்லனாக நடித்த மறைந்த இயக்குனர் மகேந்திரன் கதாபாத்திரத்திலும், மீனா மகள் நைனிகாவின் வேடத்திலும் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Theri hindi

விஜய் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான தெறி படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருப்பது மட்டுமின்றி, அவருடைய கெத்து மிகவும் அழகாக காட்டப்பட்டிருக்கும். அதேபோல, வில்லனாக நடித்த இயக்குநர் மகேந்திரன் படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றார். இவர்களின் காம்போ இன்றுவரை ரசிர்கள் மனதில் மறையாமல் நின்றுள்ளது.

From around the web