சிறப்பு காட்சிக்கு அனுமதி.. ஆனா.. லியோ படத்திற்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசு! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் நடிப்பில் வெளியாகயுள்ள லியோ சிறப்பு காட்சியை காலை 9 மணிக்குதான் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லியோ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனிடையே படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை கூடுதலாக ஒரு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், கோவை உள்ளிட்ட சில இடங்களில் காலை 8 மணிக்கே முதல் காட்சிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்நிலையில் லியோ சிறப்பு காட்சியை காலை 9 மணிக்குதான் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதே போன்று, நள்ளிரவு 1.30 மணியுடன் அனைத்துக் காட்சிகளையும் முடித்துக் கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், லியோ திரைப்படத்திற்கான டிக்கெட் விலை மற்றும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகாலை காட்சி வெளியாகும் என எதிர்பார்த்து அட்வான்ஸ் புக்கிங் செய்திருந்த ரசிகர்கள் பலர் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகாலை காட்சிக்கு புக் செய்த டிக்கெட் பணத்தை எப்படி திரும்ப வாங்குவது என குழப்பமும் அடைந்துள்ளனர்.