மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்.. உதவி செய்ய நடிகர் விஜய் வேண்டுகோள்!

 
Vijay

தமிழ்நாடு அரசுடன் இணைந்து புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு தனது இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 4-ம் தேதி தமிழ்நாட்டை தாக்கியது. இதனால் கடலோர  மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதிகனமழை பெய்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில்  பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும் தாழ்வான பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியாமல், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Chennai

இந்நிலையில், மக்கள் இயக்க நிர்வாகிகளும் அரசுடன் இணைந்து புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மிக்ஜாம் புயல், கனமழையால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ள விஜய், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து உதவிக் கேட்டு, சமூக வலைதளங்கள் வழியாக குரல்கள் வந்த வண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

A post shared by Vijay (@actorvijay)

இந்நிலையில், அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்நார்வலர்களாக ஈடுபடுத்திக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். அத்துடன், கை கோர்ப்போம் துயர் துடைப்போம் என்ற ஹேஷ்டேக்கையும் நடிகர் விஜய் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே பல்வேறு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web